Friday, 18 April 2008

நிறுத்துங்கள்: படுகொலைகளை

ஏப்ரல் 29, 1986 என்றும் போல அன்றும் அந்த காலைப்பொழுது மலர்ந்தது. காலைச் செவ்வானம் தமிழீழம் கேட்டு போராடச் சென்ற இளைஞர்களின் குருதியில் தோய்வதற்காய் உதித்தாக எண்ணி இருக்கவில்லை. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் மிக மோசமான பக்கங்கள் எழுதப்படப் போகின்றது என்பதை அறியாமலேயே தமிழ் மக்கள் விழித்தெழுந்து தத்தமது கடமைகளுக்குத் தயாராகினர்.

இந்த நாளுக்கு சில வாரங்களுக்கு முன்னரேயே சங்கர் லால் அப்போது வட்டுக்கோட்டைக்குப் பொறுப்பாக இருந்த ரெலோ இயக்கத்தின் தலைவர் எமது வீட்டில் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு வந்து பெட்டி பெட்டியாக மறைத்து வைத்தார். எனது சகோதரன் வேறொரு இயக்கமான தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்திருந்த போதும் சங்கர் லால் அதைப் பற்றி அக்கறைப்படவில்லை. திடீரென வட்டுக்கோட்டை கிராமம் இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதலுக்கு உள்ளானது. இத்தேடுதல் அடிக்கடி இடம்பெற்றதை அடுத்து எமது வேண்டுகோளின் படி மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களை சங்கர் லால் இடம்மாற்றினார். இருந்தாலும் எமது நட்புத் தொடர்ந்தது. இரவு வேளைகளில் வருவார். குடும்பத்தவர்களுடன் உரையாடுவார். அப்பாவுடன் மிகவும் நட்பானார். எங்கள் குடும்பத்தவர்களைப் பொறுத்தவரை சங்கர் லால் ஒரு முன்னுதாரணமான போராளி.

ஆயுதங்களுக்கு மேலால் மக்களையும் அவர்களின் உறவையும் நம்பிய ஒரு நல்லுள்ளம் கொண்ட இளைஞர். சங்கரத்தையில் பத்திராளி கோயில் மிகவும் பிரசித்தமானது. சங்கரதைச் சந்தியில் இருந்து பத்திராளி கோயிலுக்குச் செல்லும் வழியில் ரெலோ இயக்கத்தின் ஒரு முகாம் உள்ளது. இலங்கை இராணுவத்தின் முகாம்களையொட்டி விடுதலை இயக்கங்கள் காவல் அரண்களை அமைத்து இருந்ததால் இலங்கை இராணுவம் வெளியேறி தமது முகாம்களை அழித்துவிட முடியாது என்ற நம்பிக்கையில் தமிழீழ விடுதலை இயக்க முகாம்களில் பெரிதாக பாதுகாப்பு ஏற்பாடுகள் இருப்பதில்லை.

அவ்வாறே சங்கரத்தையில் இருந்த ரெலோ முகாமும். அப்போது கண்நோய் பரவி இருந்த காலமும். புதிதாக இயக்கத்தில் சேர்க்கப்பட்டவர்களும் பலர் இருந்தனர். இந்த முகாமில் படலையைத் திறந்ததும் விறாந்தை என்றும் போல் அன்றும் அதில் அனைவரும் உறங்கிக் கொண்டு இருந்துள்ளனர்.
“புலிகள் ரெலோக்காரர்களை சுடுகிறான்கள்” என்ற செய்தி காட்டுத் தீ போல் பரவியது. ஆரம்பத்தில் இது ஒரு உள்ளுர் சம்பவமாகவே ரொலோ இயக்கத்தவராலும் கருதப்பட்டாலும் நேரம் செல்லச் செல்ல பல ஊர்களில் இருந்தும் வந்த தகவல்கள் நிலைமையின் கொடூரத்தை விளக்கியது. சங்கர் லாலும் கொல்லப்பட்டு விட்டார் என்ற செய்தியும் எம்மை எட்டியது. இதற்கு சில தினங்களுக்கு முன் அப்போது வட்டுக்கோட்டைக்கு புலிகளின் தலைவராக இருந்த பிரசாத் சங்கர் லாலை தனது முகாமுக்கு அழைத்துச் சென்று அப்பம் சுட்டுசாப்பிட்டார்கள். அதே பிரசாத்தே சங்கர் லாலை சுட்டுக் கொன்றார் என்ற செய்தியும் எமது செவிகளை எட்டியது. இன்று பிரசாத் லண்டனில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ளார். இவ்வாறு பல சம்பவங்கள். பல சங்கர் லால்கள். பல பிரசாத்கள்.

நானும் அப்பாவும் சங்கர் லாலுக்கும் கொல்லப்பட்ட ஏனைய போராளிகளுக்கும் எமது இறுதி அஞ்சலியைச் செலுத்த சென்றிருந்தோம். படுத்திருந்த போது கொல்லப்பட்ட அந்த இன்னுயிர்களின் தலை சிதறி சுவரில் இரத்தமும் சதையும் ஒட்டியிருந்தது. இரத்த வெள்ளத்தில் உடல்கள். இதயத்துடிப்பு நின்ற பின்னும் சங்கர் லாலின் கைக்கடிகாரம் டிக் டிக் என காலக் கணிப்பைத் தொடர்ந்தது. மறுநாள் காரைநகர் மக்கள் இபோச பஸ் வண்டிகளில் சாரைசாரையாக வந்து இறங்கினர். பல்லாயிரம் பேர் கலந்து கொண்டு பிரேதப் பேழைகளை காரைநகருக்கு எடுத்துச் சென்றனர்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பத்துடனேயே சகோதரப் படுகொலைகளும் ஆரம்பித்து விட்டது. ஆனால் 1986 ஏப்ரல் 29ல் இடம்பெற்றதே மிக மோசமான ஸ்தாபன மயப்படுத்தப்பட்ட திட்டமிடப்பட்ட கூட்டுப் படுகொலை.

இதுவரை விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,000 அதிகம் என மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பு தெரிவிக்கின்றது. இவற்றைவிட ஏனைய விடுதலை அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் உட்படுகொலைகளிலும் சகோதரப் படுகொலைகளிலும் ஈடுபட்டிருந்தனர். ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது எதிரி எமது இனத்தின் மீது மேற்கொண்ட இனச் சுத்திகரிப்பிற்கு எவ்விதத்திலும் குறையாமல் நாம் வளர்த்துவிட்ட விடுதலை அமைப்புகளும் எம்மை அழித்துள்ளன. தமிழீழ விடுதலை நியாயமானதா? சாத்தியமா? என்பதற்கு அப்பால் 1986 ஏப்ரல் 29லேயே எமது தமிழீழ விடுதலைக் கனவு கலைக்கப்பட்டுவிட்டது என்பதே உண்மை.

தமிழ் மக்களின் உயிர்களைக் கொல்வதற்காக எந்தத் தமிழ் மக்களும் போராளிகளையும் தலைவர்களையும் உருவாக்கவில்லை. அரசியல் படுகொலைகள் முற்றாக நிறுத்தப்படாத வரை தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் இருண்டதாகவே இருக்கும். வி.புலிகளும், ஏனைய ஆயுதக் குழுக்களும் அரசியல் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல மலையக, முஸ்லீம், சிங்கள மக்களுக்கும் பொது எதிரியான பேரினவாத இலங்கை அரசுக்கு எதிராக போராட முன்வர வேண்டும்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கு வி புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட அனைத்து ஆயுதக் குழுக்களின் தலைவர்களும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்பதுடன் இனிமேல் இவ்வாறான மனித நாகரீகத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடமாட்டோம் என்ற உறுதியை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும். இதனைச் செய்யாத எவரும் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தகுதியற்றவர்களே. தயவு செய்து நிறுத்துங்கள்: படுகொலைகளை.

நான் படுகொலை செய்யப்பட்டவர்களின் ஏகபிரதிநிதியல்ல