Wednesday, 14 May 2008

புலிகளின் தாங்கு பாலம் தகரும் அபாயம்!! ரெலோ உறுப்பினர்கள் ஜேர்மனியில் ஒன்று கூடல். -பீமன்

May 14, 2008http://athirady.com/?p=18859#more-18859
தமிழீழக் கோரிக்கை பாசிசத்தீயில் எரிந்து நாசமாகி 22 வருடங்களின் பின்பு ஜேர்மனி நாட்டில் டோட்முண்ட் எனும் இடத்தில் அதன் நினைவுகள் மீட்டப்பட்டன. மிகவும் அமைதியான அந்த இடத்தில் ஆரவாரங்கள் எதுவும் இல்லாமல் நடந்து கொண்டிருந்த அந்த நிகழ்வில் ஒரு மூலையில் இருந்து அவதானித்து கொண்டிருந்த போது பல விதமான உணர்வுகள் மோதிக் கொள்வதை உணரக் கூடியதாக இருந்தது. மிகவும் எளிமையாக காணப்பட்ட அந்த மண்டபத்தில் எவ்வித அலங்காரங்களும் அற்ற ஓர் மேசையில் மிகவும் எளிமையான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்த வீர மைந்தர்கள் என அழைக்கப்படும் மரணித்த ரெலோ போராளிகளின் புகைப்படங்கள் சில சற்று உயரத்திலும் அதன் கீழ் அதன் தலைவர் தோழர் சிறி சபாரட்ணத்தின் உருவப்படமும் காணப்பட்ட போது, அதன் தலைவர் என்றுமே தன் போராளிகளை தனக்கும் மேலாகவே கருதியிருக்கின்றார் என எண்ணத் தோன்றியது.

நிகழ்வுகள் ஆரம்பாமாவதற்கு சற்று முன்னதான நேரம் அது, நபர்கள் ஒருவர் இருவராக மண்டபத்தின் உள் நுழைந்து கொண்டிருந்தார்கள். ஓருவரை ஒருவர் கை குலுக்கி வரவேற்று கொண்டார்கள. அவர்கள் அவ்வாறு கைகுலுக்கிய போது அவர்களது கண்கள் மிகவும் நேராக ஒருவரை ஒருவர் நோக்கிய கணப்பொழுதுகளில் கடந்த 22 வருட சோக நினைவுகள் பரிமாறப்பட்டதை உணர முடிந்தது.

சட்டென்று அங்கு ஓர் அமைதி நிலவியது. நிகழ்வுகள் ஆரம்பமாயின, ஒருவர் நிகழ்ச்சி நிரலை வாசித்தார். முதலில் குத்து விளக்கேற்றுவதென்றும் அதனை தொடர்ந்து அனைவரும் வீர தீபமேற்றி வீர மைந்தர்களுக்கு அஞ்சலி செலுத்துவதென்றும் அடுத்து அவர்களது நினைவுகளை பகிர்ந்து கொள்வதென்றும் அதைத்தொடர்ந்து இன்றைய ரெலோவின் செயற்பாடுகள் சம்பந்தமாகவும் எதிர்கால முன்னெடுப்புகள் சம்பந்தமாகவும் அனைவரும் தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்வதெனவும் கூறினார்.

அங்கு மேசையில் வைக்கப்பட்டிருந்த தோழர் சிறி சபாரட்ணத்தின் படத்தின் முன்பிருந்த இரு குத்து விளக்குகளுக்கு இருவர் சுடரேற்ற குழுமியிருந்தவர்கள் அனைவரும் வரிசையாக சென்று வீர தீபமேற்றி தமது வீர அஞ்சலிகளை செலுத்திய விதம் மிகவும் உணர்வு பூர்வமாக இருந்தது.

தொடர்ந்து கருத்துப் பகிர்வுகள் ஆரம்பமாகின. அனைவரது கருத்துக்களும் புலிகளை எதிர்பதாகவும் புலிகளின் பாசிச செயல்பாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும் என்பதாவும் இருந்தது.

அங்கு ஒருவர் கருத்து தெரிவிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏக பிரதிநிதித்துவக் கொள்கை எம் மக்களுக்கான தீர்வு ஐக்கிய இலங்கைக்குள்ளேயே அமைய வேண்டும் என்று கூறகின்றது எனவும், அரசியல் அரங்கில் மக்களின் தெரிவுக்காக பல கட்சிகள் தேவை என்றும, அந்த வகையில் இலங்கையில் இருக்க கூடிய அனைத்து கட்சிகளுடனும் சேர்ந்து செயற்பட வேண்டிய தேவையிருப்பதால் தமிழீழ விடுதலை இயக்கம் எனும் பெயரில் உள்ள ஈழம் என்கின்ற பிரிவினைவாத சொற்பதம் நீக்கப்பட்டு பெயரில் கூட ஒரு மாற்றம் ஏற்படுவது ஒரு நல்ல சமிக்கையாக அமையும் எனவும் தெரிவித்தார். அக்கருத்து அங்கு பலத்த வாத பிரதிவாதங்களை ஏற்படித்தியிருந்ததுடன் இவ்விடயம் சம்பந்தமாக தொடர்ந்து வரும் கூட்டத்தொடர்களில் விவாதிப்பதென முடிவெடுக்கப்பட்டது.

தொடர்ந்து கருத்து தெரிவித்த ஒருவர் இலங்கையில் மக்கள் அனுபவிக்கின்ற துயரங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டுமாயின் அங்கு புலிகள் இல்லாது ஒழிக்கப்படவேண்டும் என்றும் அதனடிப்படையில் அனைத்து மக்களும் இன, மத, மொழி, அரசியல் பேதங்களுக்கப்பால் ஒன்றுபட வேண்டும் என்றும் தெரிவித்தார், அக்கருத்து அங்கு குழுமியிருந்தவர்கள் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக காணப்பட்ட போதும் அதற்கெதிரான தனது கருத்தை முன்வைத்த ஒருவர் புலிகள் இல்லாதொழிக்கப்பட்டால் யார் மக்களை காப்பாற்றுவது? என்ற கேள்வியை எழுப்பிய போது அதற்கு பதிலளித்த நபர் கூறுகையில் இன்று எமது மக்களினுடைய பிரச்சினைகள், அவற்றின் தீர்வுக்கான முட்டுக்கடை;டைகள் யாவுமே புலிகளினது ஏக பிரதிநிதித்துவ மோகமும் அவர்களது பாசிசப் செயல்பாடுகளுமுமேயாகும் என்றதுடன் புலிகள் இல்லாதொழிக்கப்படும் பட்சத்தில் புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களில் பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் சுய தொழில் செய்வதாகவும் அவர்கள் வியாபாரங்களில் அபிவிருத்தியடைந்து மிகவும் வசதியாக உள்ளதாகவும் இன்று இலங்கையில் புலிகளினால் மேற்கொள்ளப்படுகின்ற கப்பம் வாங்குகின்ற செயல்பாடுகள் முடிவுக்கு வந்து ஒர் நிரந்தர சமாதானம் வருமாக இருந்தால் இத்தனை மக்களும் இலங்கையில் முதலீடு செய்யும் போது எம் மக்களின் ஏராளமான பிரச்சினைகள் முடிவுக்கு வருமெனவும் தெரிவித்தார்.

இறுதியாக அங்கு ரெலோ அமைப்பின் ஆரம்பாகால வரலாறுகள், தவறுகள், இன்று புலிகளை ஆதரித்து செல்கின்ற ரெலோ தலைமையை ஏற்று தொடர்ந்தும் செயல் படுவதா? அன்றேல் அதற்கான மாற்று வழிகள் யாவை? ஏன்கின்ற விடயங்களில் பலத்த வாதப் பிரதிவாதங்கள் மிகவும் காரசாரமாக இருந்தது. இன்றைய தலைமையை எதிர்ப்பதென்று கூறிய பலர் தலைமை மீது பல தரப்பட்ட குற்றச்சாட்டுக்களைச் சுமத்தினர்.
இதில் குறிப்பாக இன்றைய தலைமை புலிகளை பிரதிநிதித்துவப் படுத்துவதாகவும் அது புலிகள் ரெலோ இயக்க போராளிகளுக்கு இழைத்த துரோகங்களை மறந்து அப் போராளிகளின் தியாகங்களை கொச்சைப் படுத்தி துரோகம் இழைத்துள்ளதாகவும் கூறினர். மேலும் இன்றைய தலைவர் செல்வம் அடைக்கலநாதன் புலிகளின் பணத்திற்காக 1984 லேயே சோரம் போனவர் என்றும் அவர் ரெலோவின் தலைமையை அழித்து இவ்வியக்க தலைமையைக் கைப்பற்றுவதற்காக பல துரோகங்களை இழைத்துள்ளார் என்றும், எமது பல போராளிகள் கொல்லப்படுவதற்கான காரணகர்த்தாவாக இவர் இருந்துள்ளார் என்றும் உதாரணத்திற்கு ஒன்றை கூறுவதானால் இந்தியாவில் இருந்து எமது பொறுப்பாளர்களில் ஒருவரான தோழர் காந்தன் 20 போராளிகளுடன் எமது இயக்க தோழர்களை காப்பாற்றுவதற்காக இலங்கையை நோக்கி படகில் புறப்பட்டிருந்த தருணத்தில் அவரது திட்டங்களையும் எங்கு இறங்க இருக்கின்றனர் என்ற தகவல்களையும் புலிகளுக்கு அனுப்பியிருந்தார். அதன் பிரகாரம் மன்னார் இறங்கு துறையில் வைத்து தோழர் காந்தனையும் (வைத்தியர்) 20 போராளிகளையும் மடக்கி பிடித்த புலிகள் அவ் இருபது போராளிகளையும் அந்த இடத்திலேயே வெட்டியும் கொத்தியும் குத்தியுமாக கோரமாக படுகொலை செய்ததுடன் தோழர் காந்தனை (வைத்தியர்) அவரது சொந்த இடமான நெடுங்கேணிக்கு கொண்டு சென்று அங்கு வைத்து அவருக்கு மொட்டை அடித்து கரும் புள்ளி செம் புள்ளி குற்றி களுதையில் ஏற்றி மக்கள் மத்தியில் வெட்டி கொலை செய்திருந்தமையை சுட்டிக் காட்டினர். இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் செல்வம் மீது அடுக்கப்பட்டன.

இறுதியில் இவை சம்மந்தமாக தொடர்ந்து கூடி கலந்துரையாடுவதென முடிவெடுத்து அதன் விடயங்களை ஒருங்கிணைப்பதற்காக மூவர் கொண்ட ஒரு குழுவையும் நியமித்தனர்.