Sunday, 18 May 2008

கெளரவ முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

- தமிழ் ஈழ விடுதலை இயக்கம் - (ரெலோ)

மூவின மக்களும் சரிசமமாக வாழும் கிழக்கிலங்கை மாகாண சபையின் எதிர்காலம் மொத்த இலங்கையின் அரசியல் கலாச்சாரத்துக்கு புதிய முன்னுதாரணமாகத் திகழப்போகிறது என்பதே எமது உறுதியான நிலைப்பாடாகும். கிழக்கு மண்ணில் ஜனநாயக மீட்சிக்காக அரும்பாடுபடும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளுக்கு அவர்களது அரசியல் பயணத்தில் முக்கிய திருப்பு முனையாக அமைந்து கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முக்கிய மைல்கல்லாகும்.

இத்தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினதும் அதன் அரசியல் கூட்டணியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதும் வெற்றிக்கு உழைத்த தலைவர்களில் ஒருவரான திரு சிவநேசதுரை சந்திரகாந்தன் முதலமைச்சராக அறிவிக்கப்பட்டமை கடந்த கால் நூற்றாண்டுகளாக போரில் தமது வாழ்வைத் தொலைத்துவிட்டு வெறும் கையுடன் அகதி முகாம்களில் வாழும் தமிழ் மக்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்இ முஸ்லிம் மக்கள் இடையில் சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மூவின இனங்களுக்கிடையில் ஐக்கியத்தையும் சமாதானத்தையும் கட்டியெழுப்பும் பாரிய அரசியல் கடமையை முன்வந்து சிரமேற்றுள்ளார்கள்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மாகாண சபைத் தேர்தலில் உறுதியாக கடைப்பிடித்த ஜனநாயக நியமங்களை தொடர்ந்தும் இடைவிடாது பின்பற்றுவதன் மூலமே சிறந்த தலைமையை கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கு தர முடியும் என்பதையும் நாம் இங்கு குறிப்பாகக் கோடிட்டுக்காட்ட விருப்புகிறோம். இத்தருணத்தில் கிழக்கு மாகாண சபை முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் திரு சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளை தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோதெரிவித்துக்கொள்கிறது. - 18ஃ05ஃ2008