சிறிசபாரத்தினத்தின் படு கொலையின் பின்னர் வெளிவந்த இது தமிழீழ விடுதலை இயக்கத்தின் எழுச்சிப் பத்திரிகையில் வெளியிட கலைஞர் கருணாநிதி அவர்களினால் எழுதப்பட்ட சிறு குறிப்பு.
“தாங்கிக்கொள்ள முடியவில்லை தவிக்கிறேன்” – கலைஞர்
ஈழவிடுதலைப போராளிகளின் இனமானத்தலைவர்களாக ஒளிவிட்ட தங்கத்துரை குட்டிமணி ஜெகன் மூவரும் இலங்கையின் வெலிக்கடைச் சிறையில் கொல்லப்பட்ட பின்னர் தமிழீழ விடுதலை இயக்கத்ததை தலைமையேற்று ஈழவிடுதலைப் போராட்டத்தை நடாத்தியவர் அஞ்சா நெஞ்சம் தலைவர் சிறி சபாரத்தினம் ஏதிரியைத் தடுத்திட எடுத்திடவேண்டிய ஆயுதங்கள் இனத்தின் இரத்தத்தையே குடித்து மகிழத் தொடங்கிவிட்டது.
ஈழவிடுதலை இன்னும் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்று தெரியாத நிலையிலேயே ஆட்சிப் பொறுப்பிற்கு யார் வருவது என்பதில் போராளிகளின் பல்வேறு குழுக்கள் ஆயுதம் தாங்கிப் போரிட்டு ஒருவரையொருவர் மாய்த்துக்கொண்டு மடிந்து போகிற அவலம் இப்போதே ஆரம்பமாகிவிட்டது.
கூட்டுச்சேர்ந்த ஒற்றுமை நெடிது நாள் நிற்கவில்லை.
யாரோ சாமர்த்திய சாலிகள் “சகுனி” வேலையில் இறங்கி வெற்றி பெற்றுவிட்டனர். இந்தப் பிரித்தாளும் சக்திக்கு ஈழவிடுதலைப் போராளிகளின் பாசறைகளில் எப்படியோ நடை பாவாடை விரிக்கப்பட்டுவிட்டது.
ஏதிரிகளை மறந்துவிட்டு தங்களுக்குள்ளேயே மோதிக் கொள்ள “குருஷேத்திரம் அமைத்துக் கொண்டார்கள்.
மதுரையில் இலங்கைத்தமிழர் பாதுகாப்பு மாநாடு – மத்திய அரசின் சார்பில் குழு ஒன்று இலங்கையில் பேச்சு வார்த்தை. இப்படியொரு வாய்ப்பை கலைப்பது போல யாரோ நடத்துகிற சகுனி வேலையில் போராளிகள் பலியாகலாமா? என்ற கேள்வியை மதுரைக்கு வந்தபோரளிகளிடம் கேட்டோம்இ அனைவருமே எங்கள் வேண்டுகோளை ஏற்று ஒற்றுமையுடன் செயற்படுவதாக உறுதி மொழி உரைத்தனர்.
ஆனால் மீறிவிட்டனர்! எல்லோருமல்ல! சிலர் மீறிவிட்டனர்.
போராளிகளின் தலைவனையே சுட்டுத்தீர்த்துவிட்டனர். சகுனியின் சூழ்ச்சி பலித்து விட்டது. ஆடுகள் முட்டிக்கொள்ள : அப்போது வழியும் இரத்தத்தை நரிகள் குடித்து மகிழ்கின்ற கதையைப் பால பாடத்திலேயே படித்திருக்கிறோம்: படித்ததை மறந்தவர்களையெண்ணிப் பதைத்துப்போகிறோம்! விரக்தியடைகிறோம்!
உடன்பிறப்பே! சீரங்கப்பட்டினத்து திப்புசுல்தான் கதையே ஞாபகத்திற்கு வருகிறது.
“எட்பக் வண்ண சிறுமைத்தே ஆயினும் உள்பகை உள்ளதாம் கேடு”
- எழுச்சி இ ஜுலை – ஆகஸ்டு 1986