‘வட மாகாணத்தை நிர்வகிக்க உருவாக்கப்பட்ட விசேட செயலணிக் குழு’ குறித்து மூத்த அரசியல் தலைவர் திரு ஆனந்தசங்கரி அவர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எழுதிய கடிதம், புலிகளின் ஏக தலைமைத்துவத்தை நிராகரிக்கும் ஜனநாயக சக்திகள் மத்தியில் பல்வேறு சர்ச்சைகளையும் சந்தேகங்களையும் கிளப்பியுள்ளது.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ‘செயலணிக் குழு’ குறித்து தனது சொந்த அபிப்பிராயத்தை திரு ஆனந்தசங்கரி அவர்கள் முதிற்சியற்ற முறையில் வெளியிட்டுள்ளதாக கருதும் நாம் இவ்வாறான பத்திரிக்கை அறிக்கைகள், புலிகள் தமது அரசியல் இருப்பை தொடர்ந்து தக்கவைப்பதற்காக செய்யும் வெறும் அழிவு யுத்தத்திற்கு எதிராக பரந்தளவில் முன்னெடுக்கப்பட வேண்டிய மாற்றுத் தமிழ் ஜனநாயக சக்திகளின் கூட்டு வேலைத் திட்டங்களை பலவீனப்படுத்தக் கூடியவை என்பதையும் இடித்துரைக்க விருப்புகிறோம்.
தமிழ் மக்களை தமது கோரப்பிடிக்குள் வைத்திருக்கும் ‘புலிகளின் ஏக தலைமைத்துவம்’ என்பது எவ்வாறு பாசிச அரசியலைக் கொண்டுள்ளதோ சற்று ஏறக்குறைய ‘மாற்று ஏக தலைமைத்துவம்’ என்பதும் அவ்வாறான நோய்க்கூறு கொண்ட அரசியல்தான் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை என்பதில் உறுதியாக உள்ளோம்.
வட மாகாணத்தை நிர்வகிக்க உருவாக்கப்பட்ட விசேட ‘செயலணிக் குழு’ இன்னும் விரிந்த பன்முகத்தன்மை வாய்ந்ததாக அமைய வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்துகள் ஏதும் இல்லையெனினும், திரு ஆனந்தசங்கரி அவர்கள் சொல்ல முனைந்த ‘ஜனநாயக அரசியல் நியமம்’ அவரது தவறான வெளிப்பாட்டு முறையினால் பயனற்றுப் போய்விடக்கூடிய ஆபத்தில் சிக்கிக் கொண்டுள்ளது.
புலிகள் தமிழ் மக்கள் மீது சுமத்தியுள்ள அழிவுப் போரையும் புலிகளை ஏக தலைமையாக வரித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியலையும் தோற்கடிக்க வேண்டிய மிக முக்கியமான இக்கால கட்டத்தில் அனைத்து மாற்றுத் தமிழ் ஜனநாயக சக்திகள் விரிந்த அரசியல் கூட்டு வேலைத் திட்டத்தை முன்னெடுக்க முன்வருமாறு அறைகூவல் விடுகிறோம்.
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (TELO)