Tuesday, 13 May 2008

புரட்சிக்கனல் தமிழீழ நாயகன் அமரர் சிறீ சபாரெத்தினம் (தலைவர் தமிழீழ விடுதலை இயக்கம்)

22 வது ஆண்டு நினைவு அஞ்சலி06 - 05 - 2008

முதல் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் தமிழீழ தேசபிதா தங்கத்துரை தளபதி குட்டிமணி வழிவந்த தங்க தலைவனே!

1948இல் இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் சிங்களப் பேரினவாதம் தமிழ்மக்களை அடக்கி அனாதைகளாக இரண்டாந்தரக் குடிமக்களாக நடாத்த முற்பட்டபோது தமிழ் அரசியல் தலைவாகளின் அகிம்சை வழிப் போராட்டங்கள் பலனளிக்காமல் போக அறுபதுகளின் கடைசியில் தமிழ் இளைஞர்கள் ஆயதப்போராட்டத்தில் குதிக்கும் நிலைமை உருவானது.

1970 களின் ஆரம்பகாலகட்டத்தில் அப்போது ஆட்சியில் இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் சிங்கள அரசுக் கெதிராக வீறு கொண்டெழுந்த 42 தமிழ் இளைஞர்களைக் கைது செய்து விசாரணைகள் இல்லாமல் தடுப்புக்காவலில் வைத்து சித்திரவதைகளை மேற்கொண்டது. துளபதி குட்டிமணி, பரந்தன் ராஐன் சந்ததியார், தங்கமகேந்திரன், நித்தியானந்தன் என நீளும் அந்த 42 பெயர்களைக் கொண்ட பட்டியலில் நீங்களும் ஒருவராக இருந்து சிங்களப் பேரினவாதத்தின் பல முகங்களில் ஒன்றான சிறைக் கொடுமைகளையும் அனுபவித்து நெஞ்சில் உரம் ஏற்றிக் கொண்டீர்கள்.

தமிழ் ஈழ விடுதலைப் போராட்டவரலாற்றில் இயக்கங்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவிய நீர்வேலி வங்கிக் கொள்ளையைத் தொடர்ந்து தமிழ் ஈழத்தேசபிதா தங்கத்துரை, தளபதி குட்டிமணி, தேவன் உட்படப் பல போராளிகள் 1981 இல் கைது செய்யப்பட்டு 1983 இல் வெலிக்கடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்டபின், “ என்றும் எங்கள் தலைவன் தங்கத்துரை “ என்ற கோஷத்துடன் இயக்கத்தைக் கட்டிக் காத்து சமகால இயக்கங்களுடன் ஏற்படும்போது முன்னிலை வகிக்கும் பல தாக்குதல்களை மக்களின் பாதுகாப்புடன் நடாத்தி சிங்கள அரசு இயந்திரத்தை ஆட்டங்காண வைத்து தமிழீழ போராட்ட வரலாற்றில் ஒரு பரிணாம வளர்ச்சியைக் கண்டீர்கள்.
தேசபிதா தங்கத்துரை தளபதி குட்டிமணி ஆகியோர் கைது செய்யப்பட்டபோது இருந்த அதே இராணுவக் கெடுபிடிகள்தான் இன்றும் யாழ்மண்ணில் தாண்டவமாடிக்கொண்டிருக்கிறது. 1995 இல் இரவோடிரவாக இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் அங்கே திரும்பச் செல்லும் சூழ்நிலைகள் உருவாக்கப்படவில்லை. சுமார் 38 ஆண்டு காலப்போராட்டம் யாழ்மண்ணிலும் ஏனைய தமிழ்ப்பிரதேசங்களிலும் சாதித்த சாதனைகள்தான் என்ன என்பது இன்று பெரியதொரு கேள்விக்குறியாக மாறி நெஞ்சில் உதிரத்தை கொட்டவைக்கிறது.

களநிலவரங்கள் நாளும் கவலைதருவனவாகவே இருக்கின்றன. நாளை விடியும் நமக்கெல்லாம் ஒரு வாழ்வு மலரும் என்று கண்ட கனவுகள் பொய்த்துப்போகுமோ என்று எண்ணிக்கலங்கும் அளவிற்கு சர்வதேச அழுத்தங்களும் உட்கட்சிப்போராட்டங்களும் தலைவிரித்து ஆடுகின்றன. தமிழன்னையின் பல்லாயிரக்கணக்கான செல்வங்கள் தங்கள் உயிர் உடைமைகளைத் துறந்து கட்டிஎழுப்பிய இந்தப்போராட்டம் கருகிப்போகாமலிருக்க அனைத்துத் தமிழ் அமைப்புகளும் ஒருமித்த கருத்துடனும் தூயதமிழ் உணர்வுடனும் போராட்டம் நடத்தினாலே தவிர போராட்டம் வெற்றிபெறும் சாத்தியமில்லை என்ற உண்மையை இன்றேனும் உணர்ந்துகொண்டு ஏகோபித்த இயக்கமாக அல்லாமல் ஏகோபித்த தமிழர்களாக ஒன்றுபட்டு செயல்பட வேண்டுகிறோம்.

1981 இல் தேசபிதா தங்கத்துரை, தளபதி குட்டிமணி, முன்னணிப்போராட்ட வீரர் nஐகன் ஆகியோரின் மணற்காட்டுக் காட்டிக் கொடுப்புடன் தமிழீழ விடுதலை இயக்கம் அழிந்துவிடும் என்று கனவு கண்டவர்களின் எண்ணங்களில் இடி விழுந்ததுபோல தமிழீழ விடுதலை இயக்கத்தை கட்டி எழுப்பிய விதம் கண்டு மலைத்துப்போனவர்கள் உங்களைச் சேர்ந்தவர்களைக் கொண்டே குளிர்பானத்தில் நஞ்சூட்டிக் கொலை செய்ய முயன்ற முயற்சிகளும் தோற்றுப்போக, ஈழத்தேசிய விடுதலை முன்னனியில் நான்காவதாக வந்து நாமும் இணைகிறோம் என்று நாடகமாடி, உட்கட்சிப் போராட்டத்தில் சகதோழர்களின் உயிர்கள் பாதுகாக்கப் படுவதற்காக ஆயுதங்கள் நிலத்திற்குள் புதைக்கப்பட்டிருந்தவேளையில் தொடுத்த தாக்குலில் நீங்கள் வீரமரணத்தைத் தழுவிக் கொண்டீர்கள்.

தாயக விடுதலையொன்றே தாரக மந்திரமாகக்களத்திலே போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருந்த வேளையில் ஒற்றுமையின் பெயரால் ஈழத்தேசிய விடுதலை முன்னணி என்ற போர்வைக்குள் ஒளிந்துகொண்டு அரசியல் வறுமை காரணமாக ஸ்ரீலங்கா அரசு செய்து முடிக்கவேண்டிய வேலையைத் தாமே செய்துமுடித்து எதிரியின் கைகளைப் பலப்படுத்திப் போராட்டத்தைச் சிதைவடையச்செய்த தமிழின விரோதசக்திகளால் படுகொலை செய்யப்பட்ட வீரத்தலைவனுக்கும், தமிழீழ மண் மீPட்புப்போராட்டத்தில் தாயக விடுதலைக்காக உயிர்நீத்த அனைத்துப்போராளிகளுக்கும் எமது வீரவணக்கங்கள்.

“என்றும் எங்கள் தலைவர் தேசபிதா தங்கத்துரை, கொள்கைக்குன்றம் தளபதி குட்டிமணி”

தமிழீழ விடுதலை இயக்கம.