Friday, 18 April 2008

சிறி அண்ணாவின் முகம் தெரியாமல் சிதைத்தவர்களுக்கு முகவரி தேடிக்கொடுத்து அடைக்கலம் தேடும் அடைக்கலநாதன்.

கட்டுரைகள் அன்பான ரெலோ நண்பர்களே விழித்திருங்கள்!
1986ம் வருடம் ரெலோ இயக்கப் போராளிகளைக் காட்டுமிராண்டித்தனமாகக் கொலைசெய்தும் உயிரோடு தீக்கிரையாக்கி கோரச்செயல்களைச் செய்த மாபியா கும்பலை தமிழ்பேசும் மக்கள் மறந்துவிடவுமில்லை மன்னிக்கவுமில்லை.

விடுதலைபெறவேண்டுமென்ற ஒரே கொள்கையில் இயக்கங்களில் தாமாகவே சேர்ந்துகொண்ட தமிழ் இளைஞர்கள் தங்கள் தலைமையின் கொள்கையின்பால் பற்றுக்கொண்டவர்களாகவும் விடுதலையின்பால் வெறிகொண்டவர்களாகவும் திகழ்ந்தார்கள். விடுதலைக்காகத் தங்களை முழுமையாக அர்ப்பணித்த இளைஞர்கள் தலைமையின் கட்டளைக்கு அடிபணிந்தவர்களாகச் செயலாற்றிவந்தார்கள். இலங்கையின் பல பாகங்களிலும் வாழ்ந்த தமிழ்பேசும் மக்கள் யாவரும் ஏதோ ஒருவிதத்தில் விடுதலைக்கு ஆதரவாகவே இருந்தார்கள்.

புலி மாபியாக் கும்பல் மட்டும்தான் தமிழ் மக்களுக்கு தலைமைதாங்கும் நோக்குடன் சதிவேலைகளைச் செய்ய ஆரம்பித்தது. மக்கள் மத்தியில் ஆதரவுபெற்ற ரெலோ இயக்கத்தை அழிக்கும் நோக்குடன் புலிகள் செயல்பட்டனர். ரெலோ இயக்க இளைஞர்களை தங்களிடம் வந்து சரணடையும்படி ஒலிபெருக்கிமூலம் கட்டளையிட்டனர்.

அந்நேரம் யாழ்ப்பாணத்தில் நின்ற வெளிமாவட்ட ரெலோ (கிழக்கு மாகாண) இளைஞர்கள் செய்வதறியாது திகைத்து அழுதார்கள். வழி தெரியாமல் பதைபதைத்தார்கள். மதியம் 2 மணிக்கு சரணடையவேண்டிய காலக்கெடு கொடுக்கப்பட்டது.

அவர்களிடமிருந்த ஆயுதங்களோ மிகவும் குறைவாக இருந்தது மட்டுமல்லாமல் அதற்குத் தெவையான தோட்டாக்களும் மிகவும் குறைவாகவே இருந்தது. நேரம் நெருங்க நெருங்க துப்பாக்கிச் சத்தங்களும் கேட்கத் தொடங்கின. ரெலோ உறுப்பினர்கள் சிலர் தங்களைத் தாங்களே சுட்டுக்கொண்டு மாய்ந்தார்கள். மிகவும் பரிதாபகரமான நிகழ்ச்சி யாதெனில் வெளிமாவட்ட இளைஞர்கள் பலர் செய்வதறியாது திகைத்தார்கள். எங்கே செல்வது எப்படித் தப்புவதென வழி தெரியாமல் தவித்தார்கள். இலந்தை நாயகி அம்மன் கோவிலில் கூடியிருந்த ரெலோ இளைஞர்களுக்கு மனிதாபிமானமுள்ள சில பொதுமக்கள் தேனீர் கொடுக்க முன்வந்தார்கள். அந்நேரம் அவ்விளைஞர்கள் அவர்களைப் பார்த்து அழுதவண்ணம் ... ஐயோ இன்னமும் சில நிமிடங்களில் எங்களைக் கொல்லப்போகிறார்கள். நாங்கள் எப்படித் தேனீர் குடிக்கமுடியும் என்று கதறினார்கள். அந்நேரம் மாபியாக் கும்பல்கள் ரெலோ வாலிபர்களை வேட்டையாடிக்கொண்டு வந்தார்கள்.

இதனை இலங்கை இராணுவத்தின் உலங்கு வானூர்தியொன்று தாழ்வாகப் பறந்து அவதானித்துச் சில வேட்டுக்களையும் தீர்த்தது. இறுதி அத்தியாயத்தில் இருக்கும் ரெலோ வாலிபர்கள் தங்களைச் சுடவந்தவர்களை விட்டுவிட்டு பொது எதிரியான இலங்கை இராணுவத்தின் உலங்கு வானூர்தி நோக்கிச் சுட்டு வானூர்தியை அவ்விடத்தைவிட்டு விலகச் செய்தனர். அதன் பின்னர் அவர்கள் புலி மாபியாக் கும்பல்களால் வேட்டையாடப்பட்டார்கள்.

பலபேர் உயிருடன் ரயர்கள் போட்டுக் கொழுத்தி எரிக்கப்பட்டார்கள். தமிழ் அண்ணன்மார்கள் தமிழ் தம்பிமார்களைச் சுட்டார்கள். ஒரே குடும்பத்துக்குள்ளேயே மாறி மாறிச் சுடப்பட்டார்கள். தன் உயிரைக் காக்கத் தோட்டமொன்றில் மறைந்திருந்த சிறி அண்ணா சிலரால் காட்டிக்கொடுக்கப்பட்டு அடையாளம் தெரியாதபடி கிட்டுவால் மிகவும் கேவலமாகச் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது முகம் சிதைக்கப்பட்டது. உலகிலே எங்குமே நடைபெறாத கொடுமைகள் நடந்தேறின. பொதுமக்கள் செய்வதறியாது நின்றனர். பொது எதிரியான சிங்கள இயந்திரம் எள்ளி நகையாடியது. தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கு புலி மாபியாக் கும்பலால் அன்றே சாவுமணி அடிக்கப்பட்டது. தமிழர்களுக்கு விடுதலை எடுக்கப் புறப்பட்டவர்கள் தமிழ் புலி மாபியாக்களால் கொல்லப்பட்டார்கள். தப்பியவர்கள் தமிழ் மாபியாக்களுக்குப் பயந்து வெளிநாடு சென்றார்கள். அப்போது தமிழ் மக்கள் எல்லோரும் எங்கள் எதிர்காலம் எங்கு போய் முடியுமோ எனக் கவலைப்பட்டார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் சிறி அண்ணாவை இவ்வளவு காலமும் மறந்துவிட்டு புலி மாபியாக்களுடன் சங்கமமாகித் தாளம் போட்டுவந்த அடைக்கலநாதன் திடீரென புத்துயிர்பெற்று சிறி அண்ணாவின் 21வது ஆண்டு நினைவு நாளுக்கு அஞ்சலிக் கூட்டம் நடாத்த லண்டன் மாநகரத்துக்கு வருவது பல கேள்விகளை எழுப்புகின்றது.

புலிகளின் சாயம் வெளிநாடுகளில் வெளுத்துக்ககொண்டு வருவதால் புலிகளை ரெலோ போர்வைக்குள் வைப்பதற்கு வருகின்றாரா? அல்லது புலிகளே அவரை அனுப்பி அஞ்சலி செய்யவைக்கிறார்களா? அல்லது புலிகள் ஆட்டம் காண்பதால் அவர்களை விட்டுவிட்டு பழையபடி ரெலோமூலம் தலைவராகி தனி ராஜ்ஜியம் செய்யும் எண்ணமா? தமிழ் பேசுகின்ற மக்களே சிந்தியுங்கள். அடைக்கலநாதன், சிவாஜிலிங்கம் சிறீகாந்தா, நோதரலிங்கம், கூட்டத்தினரை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.

அன்புடன்
சிறி அண்ணாவின் விசுவாசி
வசந்தன் கல்வியங்காடு