Friday, 18 April 2008

தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர் சிறீ சபாரத்தினம் மற்றும் தோழர்களின் நினைவு தொடர்பாக எழுதப்பட்ட கவிதை


தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர் சிறீ சபாரத்தினம் மற்றும் தோழர்களின் நினைவு நாளையொட்டி இன்று லண்டனில் நடைபெற்ற நிகழ்வு தொடர்பாக எழுதப்பட்ட கவிதை.


இன்று மீண்டும்
எமது தலைவர்
இன்னொரு முறையும்
சுடப்பட்டிறந்தார் !

இரத்தமும் சதையுமாய்
அவரோடிருந்து
எம்.பி. பதவிக்கும்
எலும்புத் துண்டுக்கும்
சோரம்போன தமிழ் - தேசிய நீசர் இருவர்
இன்னொரு முறையும்
எமது தலைவரை
கொன்று புசித்தனர்; !

வாய் முழுதும் குருதியை நிறைத்து
உடல்கள் எரியும் மணத்தை முகர்ந்து
கருகிய உடல்களை கிளறி எடுத்து
மீண்டும் ஒருமுறை புணர்ந்து மகிழ்ந்தனர் !

அரிதாரம் கலையாமலே புலி அவதாரம் எடுத்து
சதிகாரர் போல அரங்கேறி ஆடி
புறநானூறு வீரம் -
பொய் -
புரட்டு -
புலிப் பாட்டு -
இதிகாச வசனம் -
என பல நூறு பேசி
லண்டன் - குழுகாரருடன் சேர்ந்து கூத்தாடி மகிந்தனர் !

மரித்த எமது தோழரின் குரல்கள்
எங்களை இன்னமும் அதட்டிக் கேட்கிறது !

எங்களை ஏன் கொலை செய்தார்கள்
எங்களை உயிருடன் ஏன் எரித்தார்கள்
எங்கள் உடல்களை புதைத்தது எங்கே
எங்கள் பெற்றோர் அனாதரவானதேன்
எங்கள் பெண்டிரை ஏன் விதவைகள் ஆக்கினீர்
எங்கள் பிள்ளைகள் ஏன் அநாதைகள் ஆயினர்
எங்ஙனம் நாங்கள் துரோகிகள் ஆயினம்
எங்களைக் கொன்றதால் விடுதலை வந்ததா !

கொள்ளைகள் அடிக்க எம்.பி. பதவி
கொள்கைகள் பேச தமிழ் தேசியம்
குடும்பங்கள் வளர புலம் பெயர் நாடுகள்
கூடிக் குலாவ புலம்பெயர் உறவுகள் !

வெட்கங் கெட்ட வேசதாரிகளே
எவருடைய கைகளில் அடைக்கலம் புகுந்தீர் !
எங்கள் கனவுகளை ஏன் புதைத்தீர்கள் !

விதைக்கப்பட்ட எங்கள் வீரர்கள்
விருட்சமாய் வளர்ந்து ஒரு நாள் எழுவர்
வேட்டை நாய்கள் போலே வீதியில்
வீழ்த்தப்படுவீர் அந் நாள், கவனம்.
- ஜானகி, 6 மே 2007

வணக்கம்.